Friday, 3 January 2020

அழகான முகத்தை அழுக்காக்கிக் கொன்றது இந்தப் பாழாய்ப்போன சீதனம்~வெளியான அதிர்ச்சி தகவல் !


வாழ்வைச் சீரழித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு அரக்கர்களாகி விட்ட ஆணாதிக்க சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை தற்காலத்தில் எவரும் ஏற்பதாகவில்லை.

அதுவும் படித்த சமூகத்தில் நடக்கும் குற்றங்கள் தொடர்பில் நாம் பெரிதும் அலட்டிக் கொள்வதும் இல்லை.

ஒரு கோடி ரூபா சீதனமாகக் கொடுத்த வீட்டில் ஒரு நேரமும் உறங்க முடியாமல், ஒரு நேரச் சாப்பாட்டையும் சாப்பிட முடியாமல் பட்ட துயரங்களின் இறுதி முடிவுதான் தற்கொலையாகியது.

வைத்தியரைத் திருமணம் செய்த போதும், மன வைத்தியத்திற்கு மருந்தில்லாமல், நிம்மதியில்லாமல் நோயாளியாகி தற்கொலை செய்யும் பாவப்பட்ட நிலை இனி எந்தப் பெண்ணுக்கும் வேண்டாம்.

அழகான இந்த முகத்தை அழுக்காக்கிக் கொன்றது இந்தப் பாழாய்ப் போன சீதனம்.

ஆணாதிக்கத்தின் உச்சம் ஒரு பெண்ணின் உயிரைப் பறித்தது என்றால் ஒட்டுமொத்த ஆணினமும் வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம் இது.

பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா?ஒரு குட்டிக்கதை... 

இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான் 

”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”

கேள்வி : "ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?"

(வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை சாென்னால் தான் நமக்கு திருமணம் என்று சாெல்லியிருந்தாள்)

தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை கிடைக்கவில்லை.கடைசியாக  சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்.

அவள் சொன்னாள்.. 
"விடை சொல்கிறேன். அதனால் அவனுக்கு திருமணம் ஆகும்; உனக்கு நாடு கிடைக்கும். ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?"

 அவன் சொன்னான்,“என்ன கேட்டாலும் தருகிறேன்”

சூனியக்கார கிழவி விடையைச் சொன்னாள்,'"தன் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”

இப்பதிலை அவன் ஜெயித்த  மன்னனிடம் சொல்ல,அவன் தன் காதலியிடம் சொல்ல,அவர்கள் திருமணம் நடந்தது.இவனுக்கு நாடும் கிடைத்தது.

அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான்.வேண்டியதைக் கேள் என்றான்.

அவள் கேட்டாள்
"நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்”

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.

உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்.

அவள் சொன்னாள்,
”நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்; ஆனால் நான் வெளியே உன்னுடன் வரும் பாேது கிழவியாக இருந்தால் வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக  இருப்பேன்.இதில் எது உன் விருப்பம்?” என்றாள்.

அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான் "இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்;முடிவு நீ தான் எடுக்க வேண்டும்" என்று

அவள் சொன்னாள "முடிவை என்னிடம் விட்டு விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!" என்றாள்

ஆம்!

பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும் போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்..

Thursday, 2 January 2020

நல்லது செய்ய நினைத்துச் செய்வது நல்லதாகிறது. சில நேரம் அது கெட்டதாகவும் முடிகிறது. இதில் சூர்ப்பணகை எந்த வகையைச் சேர்ந்தவள்?நல்லது செய்ய நினைத்துச் செய்வது நல்லதாகிறது. சில நேரம் அது கெட்டதாகவும் முடிகிறது.


கெட்டதை நினைத்துச் செய்வது, கெட்டதாக ஆகிறது. சில தருணங்களில் அது நல்லதாகவும் ஆகிவிடுவது உண்டு.


இதில் சூர்ப்பணகை எந்த வகையைச் சேர்ந்தவள்?


கெட்டதை நினைத்துச் செய்து, கெட்டதாகவே முடிந்த வகையைச் சேர்ந்தவள் அவள்.


மனித மனத்தின் உணர்ச்சிகள் குறித்து நம் முன்னோர் சொன்னதைப் போல, இன்றுவரை வேறு யாரும் சொல்லவில்லை. அவர்கள் நமக்குத் தந்த உணர்ச்சிமயமான கதாபாத்திரம்தான், சூர்ப்பணகை.

சூர்ப்பணகையைப் பற்றி அறிமுகம் செய்யும்போது,


'நீல மாமணி நிருதர்வேந்தனை

மூல நாசம் பெற முடிக்கும் மொய்ம்பினாள்’ என்கிறார் கம்பர். 


அதாவது, 'இந்தச் சூர்ப்பணகை ராவணனை அடியோடு அழிக்கும் வல்லமை படைத்தவள்’ என்கிறார்.


சூர்ப்பணகை, ராவணனின் சகோதரி ஆயிற்றே! அவள் ஏன் தன் அண்ணனை அழிக்க வேண்டும்?


காரணம் இருக்கிறது. சூர்ப்பணகையின் கணவன் பெயர் வித்யுஜ்ஜிஹ்வா. அவள் பிள்ளையின் பெயர் சாம்பன். ஒருமுறை, போர் வெறியில் இருந்த ராவணன், வித்யுஜ்ஜிஹ்வாவைக் கொன்றுவிட்டான். தங்கையின் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த திருமாங்கல்யத்தைத் தரையில் வீசிவிட்டான். சூர்ப்பணகை கொதித்துப் போனாள்.


'கணவர் இறந்துவிட்டார்; அதுவும், கூடப் பிறந்தவனே கொன்று விட்டான்’ என்பது தெரிந்ததும், அண்ணன் ராவணனை அந்தகனிடம் அனுப்பிவிட வேண்டும் என அப்போதே முடிவு கட்டிவிட்டாள் சூர்ப்பணகை.


முடிவு கட்டினால் போதுமா? அதற்கான சக்தி வேண்டாமா?

மகன் சாம்பனை, தவம் செய்து சக்தி பெற்று வரும்படி அனுப்பினாள் சூர்ப்பணகை. அதன்படி, சாம்பன் தர்ப்பைப்புல் அடர்ந்த காட்டில் அமர்ந்து தவம் செய்தான். அவன் அங்கே அமர்ந்திருப்பது யாருக்குமே தெரியாதவண்ணம் அடர்த்தியும் உயரமுமாக வளர்ந்திருந்தன தர்ப்பைப் புற்கள். சாம்பனின் தவம் ஸித்தியாகும் நேரத்தில் ஸ்ரீராமர், ஸ்ரீசீதாப்பிராட்டி, ஸ்ரீலட்சுமணன் ஆகியோர் வனவாசம் வந்தார்கள். அப்போது, காட்டில் தர்ப்பைப்புல் அறுக்கப்போன லட்சுமணன், புல்லோடு புல்லாகச் சேர்த்து, சாம்பன் தலையையும் அறுத்துவிட்டான்.


ஏற்கெனவே கணவனை இழந்த துயரத்தில் இருந்த சூர்ப்பணகை, மகனையும் இழந்தாள். மனம் உடைந்தாள். மகனைக் கொன்றவர்களையும் மணாளனைக் கொன்றவனையும் மோதவிடுவது என்று தீர்மானித்தாள்.


இதில், யார் இறந்தாலும் அவளுக்கு லாபம்தான்!

அதற்காகவே, மூக்கும் காதும் அறுபட்ட நிலையில், வேகமாக ஓடிப்போய் ராவணனிடம் சீதையைப் பற்றிச் சொல்லத் தொடங்கினாள்.

சீதையின் அழகை விரிவாக வர்ணித்துவிட்டு, ''அண்ணா! சிவபெருமான் தன் உடம்பின் பாதியில் பார்வதியை வைத்திருக்கிறார். லக்ஷ்மிதேவியை மகாவிஷ்ணு, தன் வக்ஷஸ்தலத்தில் வைத்திருக்கிறார். பிரம்மதேவர் சரஸ்வதியைத் தன் நாவில் வைத்திருக்கிறார். வீரனே! நீ சீதாதேவியைப் பெற்றால், எப்படி வைத்து வாழப் போகிறாய்?'' என்று கேட்டாள்.


'வீர! பெற்றால் எங்ஙனம் வைத்து வாழ்தி?’ - கம்பராமாயணம்.

மேலோட்டமாகப் பார்க்கையில், 'உன் உடம்பின் பாதியிலா? வக்ஷஸ்தலத்திலா? நாவிலா?’ எனக் கேட்பது போலிருக்கிறதல்லவா? ஆனால், உட்பொருள் அதுவல்ல!


'சீதையைக் கொண்டு வந்த பிறகு, நீ எங்கே வாழப் போகிறாய்? உனக்கு மரணம் நிச்சயம்!’ என்பதே சூர்ப்பணகையின் சிந்தனை.

'ராவணா! நீ! சீதையைக் கொண்டு வந்தால் ஆகாயத்திலும் பூமியிலும், துயரமும் குற்றமும் உனக்கே உண்டாகும்’ என்பதே சூர்ப்பணகையின் உண்மையான வாக்கு.


அவளின் எண்ணம் போலவே, சீதையைக் கடத்திக்கொண்டு வந்த குற்றத்தால், மிகுந்த துயரத்தை அனுபவித்து, பிறகு இறந்தான் ராவணன்.


ஆக, சூர்ப்பணகை தன் முயற்சியில் வெற்றி பெற்று, எண்ணியதை முடித்துவிட்டாள்