மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளின் இயல்பு நிலை எதிர்வரும் 11ஆம் திகதி முதல் வழமைக்கு திரும்பவுள்ள நிலையில் அது தொடர்பில் ஆராயும் விசேட கொரனா செயலணிக்கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மட்டக்களப்பு மாவட்ட கொரனா தடுப்பு செயலணிக்கு தலைமை வகிப்பவருமான கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்தா உள்ளிட்ட அதிகாரிகள், இராணுவ,பொலிஸ் உயர் அதிகாரிகள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் க.கலாரஞ்சினி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலக வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், தனியார் ,இலங்கை போக்குவரத்துசபை நிலைய பொறுப்பதிகாரிகள் என பல்துறை சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் 11ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இயல்புநிலையினை ஏற்படுத்துவதற்காக ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள நிலையில் அதன்போது மேற்கொள்ளவேண்டிய செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது போக்குவரத்து குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் கிழக்கு மாகாணத்திற்குள் மட்டும் போக்குவரத்துகளை கட்டுப்பாடுகளுடன் முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறிப்பாக மாவட்டத்திற்கு மாவட்டம் அலுவலகத்திற்கு செல்லும் உத்தியோகத்தர்கள் போக்குவரத்தினை மேற்கொள்ளவும் பிரயாணம் செய்யும் பொதுமக்கள் பொதுச்சுகாதார பரிசோதகரின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நடைபெறும் போக்குவரத்துகளை வாழைச்சேனை வரையில் மட்டுப்படுத்தவும் இதன்போது பணிப்புரைகள் விடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நடவடிக்கைகளை படிப்படியாக வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை முன்னெக்கவும் கிளினிக் வருவோருக்கு தற்போதுள்ள நடைமுறைகளைப்போன்றே வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் நடைமுறைகளை மேற்கொள்ளவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
உணவு விடுதிகள் திறக்கப்படும்போது அங்கு பொதிகள் மூலமான விற்பனைக்கு மட்டும் அனுமதி வழங்குதல் எனவும் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் தற்போது மேற்கொண்டுவரும் அதே சுகாதார நடைமுறையினை ஊரடங்கு தளர்த்தப்படும் காலத்திலும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
சமூக இடைவெளியை பேணுதல்,முகக்கவசம் அணிதல், வீணான வெளி நடமாட்டங்களை கட்டுப்படுத்தல், அலுவலகங்களில் சுகாதார நடைமுறைகளை பேணுதல் போன்ற பல்வேறு செயற்பாடுகள் குறித்து இங்கு ஆராயப்பட்டதுடன் அது தொடர்பான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.