Breaking News


சில பெரும்பான்மை இனவாதிகளை திருப்திப்படுத்துவதாக நினைத்து முழு உலகத்தையும் பகைக்கும் விசப்பரீட்சையில் இறங்கியுள்ள ஜனாதிபதியின் தூரநோக்கற்ற இந்த நிலைப்பாட்டை வெறுமனே தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாடாக நினைத்து மகிழ்ச்சியுறும் பெரும்பான்மையின மக்கள் காலப்போக்கில் சிங்கள மக்களை இது எந்தளவிற்கு பாதிக்குமென விளங்கிக்கொள்வார்கள். தமிழ் மக்கள் தற்போது நீதிகேட்டு ஐக்கிய நாடுகளின் வாசலில் நிற்பது போன்று எதிர்காலத்தில் சிங்கள மக்களும் தமக்கான ஜனநாயக உரிமைகளை கோரி ஐக்கிய நாடுகள் சபையின் கதவுகளை தட்டும் நிலை உறுதியாக ஏற்படும் என இப்பொழுதே எச்சரித்துள்ளார் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ரெலோ) தேசிய அமைப்பாளரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான சுரேந்திரன் குருசுவமி.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்மக்கள் மட்டுமன்றி சிங்கள மக்களும் ஐ.நா வின் கதவுகளை விரைவில் தட்ட வேண்டி வரும் – சுரேந்திரன்

உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்தை மீளக் கூட்டுமாறு உத்தரவிட்டாலும் நான் ஒருபோதும் அதற்கு உடன்பட மாட்டேன் என ஜனாதிபதி சூளுரைத்திருப்பது, நாட்டின் நீதித்துறையை உதாசீனப் படுத்துவதோடு, தான் காக்க வேண்டிய அரசியல் சாசனத்தையும் தூக்கி வீசிய செயற்பாடாகும். தம்மை பாதுகாக்கும் என சிங்கள மக்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கும் அரசியல் சாசனத்தை நிராகரித்து, தனது நிறைவேற்று அதிகாரத்தை பாவித்து நாட்டின் ஜனநாயக்தை கேள்விக்குட்படுத்தி, அவரை ஆர்ப்பரிப்போடு தெரிவு செய்த பெரும்பான்மை மக்களின் முகத்திலும் கரியை பூசி, ஒட்டுமொத்த மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கும் ஆப்பு வைக்கும் வேலைதிட்டதின் ஆரம்பமே இதுவாகும். தழினின எதிர்ப்பு நடவடிக்கைகளால் இதை மூடிமறைக்க முற்படுவதை சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜனநாயகத்தையும் நாட்டு மக்களையும் மதித்து நடக்கின்ற நாடுகளே வேகமாக வளர்ச்சி அடைந்த நாடுகளாக மாறியுள்ளன. இலங்கை போன்ற சிறிய நாடுகளின் ஜனநாயக பண்புகளையும் பொறுப்புக் கூறலையும் பொறுத்தே அந்த நாட்டிற்கான உதவிகளை வழங்குவதற்கும் முதலீடுகளை செய்வதற்கும் வளர்ந்த நாடுகள் முன்வரும் என்பது நியதி. உலக நாடுகளின் பொருளாதாரத்தை கட்டமைத்தல் , மனித உரிமைகளை பாதுகாத்தல், சுகாதார வசதிகளை மேம்படுத்தல் , மனித குலத்திற்கு எதிரான வன்முறைகளை தடுத்தல், சரியான வளப்பகிர்வை உறுதிசெய்தல் உள்ளிட்ட பல நோக்கங்களின்பால் பல நாடுகளை உள்ளடக்கிய பல சர்வதேச அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன.

அவ்வமைப்புக்களின் செயற்பாடுகளின் பலனாக பல சிறிய நாடுகள் தம்மை பலப்படுத்தி வருகின்றன. இதை உணர்ந்து செயற்பட வேண்டிய பொறுப்பு பிற நாடுகளை நம்பி வாழும் இலங்கைக்கும் பொருந்தும். இதை உதாசீனம் செய்யும் வகையில் இலங்கையின் ஜனாதிபதி பேசியிருப்பது ஒருசில இனவாதிகளை திருப்திப்படுத்தி இந்த நாட்டை இருண்ட யுகத்திற்கு இட்டுச்செல்லும் செயற்பாடாகவே அமையும்.

கடந்த 19 – 05 – 2020  அன்று இடம்பெற்ற போர் வெற்றிக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எந்த நாடுகளோ சர்வதேச அமைப்புக்களோ இலங்கையின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க விடமாட்டேன் எனவும் அதையும் மீறி அழுத்தங்களை பிரயோகத்தால் அந்த அமைப்புக்களின் உறுப்புரிமையிலிருந்து விலகிவிடுவோம் எனவும் இறுமாப்போடு கருத்துக்களை முன்வைத்திருந்தார். இந்த பேச்சை சாதாரணமாக கடந்துபோக முடியாது இந்த உலகில் அமைதியையும் ஜனநாயகத்தையும் விரும்பும் அல்லது மதிக்கும் எவரும் இதை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள்.

சில பெரும்பான்மை இனவாதிகளை திருப்திப்படுத்துவதாக நினைத்து முழு உலகத்தையும் பகைக்கும் விசப்பரீட்சையில் இறங்கியுள்ள ஜனாதிபதி வெறும் தேர்தல் வெற்றியை இலக்குவைத்து கொரோனா தாக்கத்தினால் பாரிய பொருளாதார பின்னடைவையும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான சர்ச்சையினால் ஜனநாயக பின்னடைவையும் சந்தித்துள்ள இந்த நாட்டிற்கு இவ்வாறான வீரப்பேச்சு அவசியமா? என்பதே அறிவுள்ள நாட்டுமக்களின் கேள்வியாகவுள்ளது.

ஜனாதிபதியின் தூரநோக்கற்ற இந்த நிலைப்பாட்டை வெறுமனே தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாடாக நினைத்து மகிழ்ச்சியுறும் பெரும்பான்மையின மக்கள் காலப்போக்கில் சிங்கள மக்களை இது எந்தளவிற்கு பாதிக்குமென விளங்கிக்கொள்வார்கள். மாற்றுக்கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத பொறுப்புக்கூறலை நிராகரிக்கின்ற ஜனாதிபதியின் போக்கு தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை மட்டுமன்றி ஜனாதிபதியினதும் அவரது கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிரானதுமான அரசியல் நிலைப்பாட்டை கொண்ட சிங்கள மக்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்துவதுடன் தெற்கில் தனிக்கட்சி அரசியல் அல்லது துதிபாடும் அரசியல் சம்பிரதாயத்தையே ஊக்கப்படுத்தும்.

அதுமட்டுமன்றி அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகங்கள் உள்ளிட்ட பொது நிறுவனங்கள் யாவும் இரும்புக்கரம்கொண்டு நசுக்கப்படும். இதன்விளைவாக தமிழ் மக்கள் தற்போது நீதிகேட்டு ஐக்கிய நாடுகளின் வாசலில் நிற்பது போன்று எதிர்காலத்தில் சிங்கள மக்களும் தமக்கான ஜனநாயக உரிமைகளை கோரி ஐக்கிய நாடுகள் சபையின் கதவுகளை தட்டும் நிலை உறுதியாக ஏற்படும்.

ஒரு நாடு தனது நாட்டில் உரிமைகேட்டு போராடிய சிறுபான்மை இனத்தை அழித்துவிட்டு அந்த மக்கள் தமது உறவுகளை நினைவுகூறும் சம காலத்தில் அந்த மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசு அதை வெற்றிக்கொண்டாட்டமாக கொண்டாடுவதே தவறான முன்னுதாரணமாகும். அந்த நிகழ்வில் நாட்டின் ஜனாதிபதி தனது பொறுப்பை உணராமல் பேசியிருப்பது மொத்த நாட்டினையும் பாதிக்கும் என்பதனை இந்த நாட்டுமக்கள் உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!