Breaking News


ஏப்ரல் 21 தாக்குதலில் கொழும்பு – தாஜ் சமுத்ரா விருந்தகத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குலை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த போதும், அந்தத் தாக்குதலை நடத்த முடியாமல் போயிருந்தாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாஜ் சமுத்ரா விருந்தகத்தில் குண்டுத் தாக்குதலை நடத்த முயற்சித்தவர்கள், தாக்குதலுக்கு முந்தைய தினம், அந்த விருந்தகத்திற்கு சென்று அங்கிருந்து வெளியேறியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர், அந்த விருந்தகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியமை பாதுகாப்பு ஒளிப்பதிவு கருவிகளில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தாஜ் சமுத்ரா விருந்தக வளாகத்தின் பாதுகாப்பு முகாமையாளர் எஸ்.ஐ. சுஜீவ பெர்ணான்டோ நேற்று முன்தினம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார்.

விருந்தகத்திற்கு வந்து செல்லும் அனைவரிடமும் தகவல்கள் பெறப்படுவதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில், சில வருடங்களாக மேற்கொள்ளப்படுவதற்கு அமைய, ஏப்ரல் 20 ஆம் திகதி விருந்தகத்தில் தங்கியிருந்தவர்களின் பெயர்ப்பட்டியல், நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் தயாரிக்கப்பட்டு, அரச புலனாய்வு பிரிவுக்கும், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்கும் அனுப்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஜமீல் என்ற நபர் தொடர்பில் 823533241 வி என்ற தேசிய அடையாள அட்டை இலக்கத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டிருந்ததா? என ஆணைக்குழு இதன்போது வினவியது.

இதற்கு பதிலளித்த சாட்சியாளர், குறித்த ஆவணத்தில் அவரின் பெயர் மாத்திரமே குறிப்பிடப்பட்டிருந்தாக தெரிவித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டை இலக்கம் பதிவுசெய்யப்பட்டிருக்கவில்லை என்றபோதும், அடையாள அட்டையின் பிரதி பெற்றுக்கொள்ளப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த நபர் ஏப்ரல் 20 ஆம் திகதி பிற்பகல் 4.53 அளவில் இழுத்துக்கொண்டு செல்லக்கூடிய கைப்பை ஒன்றுடன் விருந்தகத்திற்குள் செல்வது கண்காணிப்பு ஒளிப்பதிவு கருவியில் பதிவாகியுள்ளதாக சாட்சியாளர் கூறியுள்ளார்.

அவர், குறித்த விருந்தகத்தில் 365ஆம் இலக்க அறையை முன்பதிவு செய்திருந்தார். ஒரு மணித்தியாலத்தின் பின்னர் ஜமீல் மொஹமட் விருந்தகத்திலிருந்து வெளியேறுவது கண்காணிப்பு ஒளிப்பதிவு கருவியில் பதிவாகியிருந்தது.

இதன்போது அவர் முன்னதாக கொண்டு சென்ற இரண்டு பைகளையும் காண முடியவில்லை. அவர் வேறொரு வாகனத்தில் அங்கிருந்து வெளியேறினார்.

அன்றிரவு அவர் மீண்டும் விருந்தகத்திற்கு வரவில்லை. தாக்குதல் நடத்தப்பட்ட தினம், அதாவது 21ஆம் திகதி முற்பகலே அவர் விருந்தகத்திற்கு வந்தார்.

முந்தைய தினம் முன்பதிவு செய்த அறைக்கு சென்ற ஜமீல் மொஹமட், சிறிது நேர்த்தின் பின்னர், பயணப் பொதிகள் உட்பட மேலும் சில பைகளுடன் அறையிலிருந்து வெளியேறினார்.

இதன் பின்னர் அவர் போட்ஸ் ஒப் கோல் சிற்றுண்டிச் சாலையை நோக்கி செல்ல முயற்சித்தபோது, அங்கிருந்த அதிகாரி ஒருவர், பெருமளவான பைகளை கொண்டு செல்வதற்கு வாய்ப்பளிக்கவில்லை.

பின்னர், சிற்றுண்டிச் சாலைக்குள் செல்லும் அவர், சிலமுறை நடமாடி அங்கு ஏதோ ஒரு செயற்பாட்டை முன்னெடுக்க முயற்சித்தார்.

இதையடுத்து, சிற்றுண்டிச்சாலையிலிருந்து வெளியேறும் ஜமீல் மொஹமட், சிற்றுண்டிச் சாலையின் நுழைவாயில் அருகில் பெருமளவான பைகளை கைவிட்டுச் சென்ற நிலையில், மீண்டும் ஒருமுறை தனது அறைக்கு சென்றுள்ளார். மீண்டும் அறையிலிருந்து மற்றுமொரு பையுடன் வெளியேறிய அவர், மீண்டும் சிற்றுண்டிச்சாலைக்கு செல்வதுடன், இதன்போது குறித்த பெருமளவான பைகள் பாதுகாப்பு அதிகாரியினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் அவர் விருந்தகத்தின் சிற்றுண்டிச்சாலையில் ஏதோ ஒரு செயற்பாட்டில் ஈடுபட முயற்சித்தார்.

இதையடுத்து அவர், தனது தோளில் அணிந்திருந்த பை மற்றும் இழுத்துச் செல்லக்கூகூடிய பை என்பனவற்றுடன் விருந்தகத்திலிருந்து வெளியேறி, காலி வீதி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியில் பயணித்தமை கண்காணிப்பு ஒளிப்பதிவு கருவியில் அவதானிக்க கூடியதாக இருந்தது என அவர் கூறியுள்ளார்.

இதன் பின்னர் கேள்வி எழுப்பிய ஆணைக்குழு, ஜமீல் மொஹமட் கண்காணிப்பு ஒளிப்பதிவு கருவிகளை தவிர்க்க முயற்சித்தாரா என வினவியது.

இதன்போது பதிலளித்துள்ள சாட்சியாளர், ஒளிப்பதிவு கருவி தொடர்பில் அறிவும், முன் அனுபவமும் உள்ளவர்களினால் மாத்திரமே இவ்வாறு செயலாற்ற முடியும் என கூறியுள்ளார்.

பின்னர், அவர் மீண்டும் விருந்தகத்திற்கு வந்தாரா என ஆணைக்குழு கேள்வி எழுப்பியது.

2019 ஏப்ரல் 17ஆம் திகதி மற்றுமொரு நபர் வந்து, அவர் தங்கியிருந்த அறை தொடர்பில் வினவியதாக சாட்சியாளர் பதிலளித்துள்ளார்.

இதையடுத்து, கேள்வி ஒன்றை தொடுத்த ஆணைக்குழு, தாக்குதல் தொடர்பில் இந்திய புலனாய்வு பிரிவினால் அறிவுறுத்தப்பட்டிருந்த விடயம் குறித்து, தாங்கள் அறிந்திருந்தீர்களா என வினவியது.

இதற்கு பதிலளித்த சாட்சியாளர், அது குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேரக ஆணைக்குழுவில் முன்னதாக கூறியிருந்தமை போன்று, 21 ஆம் திகதி பிரபுக்கள் வகுப்பை சார்ந்தோர் விருந்தகத்தில் தங்கியிருந்தனரா? என ஆணைக்குழு வினவியது.

இதற்கு பதிலளித்துள்ள சாட்சியாளர், இல்லை என கூறியுள்ளார்.

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!