Breaking News

பாகிஸ்தான் விமான விபத்திற்கு மனித தவறே காரணம்: கொரோனா பற்றி உரையாடிக் கொண்டிருந்த விமானி!


97 பேரைப் பலி கொண்ட பாகிஸ்தான் பிஐஏ விமான விபத்திற்கு, விமான ஓட்டியின் கவனக் குறைவே காரணம் என, விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விமான போக்குவரத்து அமைச்சர் குலாம் சர்வார் கான் இன்று புதன்கிழமை தேசிய சட்டமன்றத்தில் பேசியபோது, ​​மனித தவறே விபத்திற்கு காரணமென விசாரணையில் கண்டறியப்பட்டதாக தெரிவித்தார்.

பாகிஸ்தானில் கடந்த மாதம் லாகூரிலிருந்து 98 பயணிகள், 9 ஊழியர்கள் என மொத்தம் 107 பேருடன் புறப்பட்டுச் சென்ற பிஐஏ விமானம் கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே வந்தபோது சிக்னலை இழந்தது. இதனைத் தொடர்ந்து கராச்சி நகர் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இந்த விமான விபத்தில் 97 பேர் பலியாகினர்.

இதில் பிஐஏ விமான விபத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டு விசாரணை நடந்தப்பட்டு வந்தது. விமானத்தில் லாண்டிங் கியரில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதலில் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது விபத்து தொடர்பாக நடந்த விசாரணையின் முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில், “விமான ஓட்டியும், விமானக் கட்டுப்பாட்டாளரும் வழக்கமான விதிகளைப் பின்பற்றவில்லை. அவர்கள் இருவரும் விமானத்தைக் கவனிக்காமல் கொரோனா வைரஸ் குறித்தே உரையாடிக் கொண்டிருந்தனர். விபத்துக்குள்ளான விமானத்தில் எந்தக் குறைபாடும் இல்லை. நூறு சதவீதம் பறப்பதற்குத் தகுதியான விமானம்தான் அது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம்தான் ஊரடங்கு தளர்த்தப்பட்டு போக்குவரத்துகளும் அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில் இந்த விமான விபத்து ஏற்பட்டது.

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!