Breaking News



நாட்டில் தாக்குதலை மேற்கொள்வதற்காக சஹ்ரான் ஹஸீம் தனது ஆதரவாளர்களை தூண்டுவதாக, ஏப்ரல் 21 தாக்குதலுக்கு 6 மாதங்களுக்கு முன்னர், தேசிய புலனாய்வுத்துறையின் முன்னாள் தலைவர் சிசிர மென்டிஸுக்கு தான் அறிவித்திருந்ததாக அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளரான, சிரேஷ்ட காவல்துறைமா அதிபர் நிலந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்றைய தினம் சாட்சியமளித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்ற தேசிய பாதுகாப்பு சபையின் சில கூட்டங்களில், குராசன் என்று ஐ.எஸ் பயங்கரவாதிகள் அடையாளப்படுத்தும் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இலங்கை வரைபடமாக்கப்பட்டிருந்தாக தாம் அறியப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அந்த அடையாளப்படுத்தலுக்கு அமைய, இலங்கையின் செயற்பாட்டாளராக அமீர் என்ற பெயரில் சஹ்ரான் ஹஸீம் அடையாளப்படுத்தப்பட்டிருந்தாக சாட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அந்த செயற்பாட்டு ரீதியான அமைப்பின் நிறுவுனர் சஹ்ரான் இல்லை என்றும், நௌபர் மௌலவி என்பனரே அதன் நிறுவுனர் என்றும் சாட்சியாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபடுவதற்காக சிரியாவுக்கு சென்றவர்கள் குறித்தும், அவர்களின் தொடர்பு வலையமைப்பு குறித்தும் தேசிய பாதுகாப்பு சபைக்கு மிகவும் விரிவாக தகவல் வழங்கியதாகவும் நிலந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்போது கேள்வி எழுப்பிய ஆணைக்குழு, ஐ.எஸ் பயங்கரவாதிகள் நாட்டுக்குள் ஊடுருவும் அபாயம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு சபைக்கு அறிவித்தபோது, அதனிடமிருந்து கிடைத்த பதில் என்ன என்று வினவியுள்ளது.

அந்த வினாவுக்கு பதிலளித்த சாட்சியாளர் நிலந்த ஜயவர்தன, ஊடகவியலாளர்களை தவிர்த்து, சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரிகள் மாத்திரம் இருக்கும் சந்தரப்பத்தில் பதிலளிப்பதாக கூறியுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்துள்ள ஆணைக்குழு, இந்த ஆணைக்குழுவில் இதுவரையில் பல்வேறு விடயங்கள் வெளிப்பட்டுள்ளதாகவும், அவற்றின் அடிப்படையிலேயே கேள்விகள் எழுப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
உங்களுக்கு முன்னர் ஆணைக்குழுவில் 255 பேர் சாட்சியமளித்துள்ள நிலையில், நீங்கள் 256 ஆவது நபராவீர்கள் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
எனவே, கூறவேண்டியவற்றை கூறுமாறு சாட்சியாளரிடம் ஆணைக்குழு கோரியுள்ளது.

இதன்போது பதிலளித்துள்ள சாட்சியாளர், வேறு நபர்கள் கூறியதற்காக தன்னால் கூற முடியாது என்றும், தான் அரச புலானாய்வு துறையின் முன்னாள் பணிப்பாளர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த விடயங்களை பகிரங்கப்படுத்துவதனால், அரசியல் மற்றும் தனிப்பட்ட ரீதியில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என நிலந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!