Breaking News


மாத்தறை பொல்ஹென பகுதியில் உள்ள ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்ய விமான பணிப்பெண்கள் குறித்த எந்த தகவலும் அப்பகுதியில் உள்ள பொது சுகாதார பரிசோதகர்களிடமோ அல்லது சுகாதார அதிகாரிகளிடமோ முன்பே தெரிவிக்கப்படவில்லை என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஏர்லைன்ஸ் விமானத்தின் 15 விமான பணிப்பெண்கள் மாத்தறையில் உள்ள ஒரு ஹொட்டலில் தங்கியிருந்ததாகவும், அவர்கள் முச்சக்கர வண்டிகளில் அப்பகுதியில் உள்ள மூன்று வணிக வளாகங்களுக்குச் சென்றதாக தகவல் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.

15 பேர் கொண்ட குழுவினர் 13 ஆம் திகதி இந்தியாவின் பெங்களூரிலிருந்து மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த இந்தியாவில் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொண்டனர். அந்த ஆவணங்களை காண்பித்து விமான நிலையத்திலிருந்து வெளியேறினர். அதேவேளை, விமான நிலையத்திலும் அவர்கள் பிசிஆர் சோதனைக்குட்பட்டனர்.

அந்தக் குழு தனியார் வாகனங்களைப் பயன்படுத்தி விமான நிலையத்திலிருந்து மாத்தறை பொல்ஹென பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குப் புறப்பட்டது.

விமானக் சிலைய பி.சி.ஆர் சோதனையில், 52 வயதான ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் தெரிவித்தார்.

ஹொட்டல் ஊழியர்கள், அவர்களது குடும்பங்கள், ரஷ்ய விமான பணிப்பெண்களால் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளின் ஓட்டுநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 110 பேர் உள்ளூர் சுகாதார அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள் பி.சி.ஆர் சோதனைகளிற்குட்படுத்தப்பட்டு,  தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களை தவிர வேறு நபர்களுடன் ரஷ்யர்கள் தொடர்புபட்டிருக்கிறார்களா என்பது குறித்த தகவல்களை இப்பகுதியில் உள்ள சுகாதார அதிகாரிகள் தேடி வருவதாகவும், இந்த வெளிநாட்டினர் உண்மைகளை மறைத்து வருவதால் அவர்களைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

இந்த நிலைமை காரணமாக சமூக ரீதியாக நாட்டில் கொரோனா வெடிக்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்தார்

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!